இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்தகடற்படை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் நடைபெற்றது
2024 ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்டை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிச் சடங்கு 2024 ஜூன் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் இப்பாகமுவ ஹிபவ்வ பொது மயானத்தில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா, கடற்படை வீரர் ரத்நாயக்கவின் உடலுக்கு 2024 ஜூன் 26 ம் திகதி இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதிச் சடங்கில் கௌரவ மகா சங்கத்தினர், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், சிரேஷ்ட மாலுமியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வடமாகாண மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பரிதாபமாக உயிரிழந்த மூத்த மாலுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுக்க அவர்கள் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள் மற்றும் அபாயங்கள் காரணமாக இலங்கை கடற்படையினர் மீது வடக்கு மீனவ சமூகம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.