ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 21) ஓய்வு பெற்றார்.
இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.
1990 ஆம் ஆண்டில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 08 ஆவது குழுவைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய, தனது பதவிக் காலத்தில் பிரதிப் பணிப்பாளர் கடற்படை சிவில் பொறியியலாளர் (சிறப்பு திட்டங்கள்),கெப்டன் சிவில் பொறியியலாளர் திணைக்களம் (தெற்கு),கெப்டன் சிவில் பொறியியலாளர் திணைக்களம் (கிழக்கு), பிரதிப் பணிப்பாளர் (இலங்கை கடற்படையின் கட்டுமானப் பிரிவு - பாதுகாப்பு தலைமையக வளாகம் அக்குரேகொட), பிரதிப் பணிப்பாளர் (சிறப்பு திட்டங்கள்), பிரதி பணிப்பாளர் கடற்படை சிவில் பொறியாளர், பணிப்பாளர் கடற்படை சிவில் பொறியாளர், பணிப்பாளர் கடற்படை சிவில் பொறியாளர் மற்றும் ஆலோசனைப் பொறியாளர் (ஜனாதிபதி மாளிகையின் சிறப்புத் திட்டங்கள்), ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் (பொறியியல்) மற்றும் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியாளர் ஆகிய முக்கிய பதவிகளில் பணியாற்றினார்.