கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரம் துபாராமயவில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஒக்டோபர் 18) அனுராதபுரம் துபாராம வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவது கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அளவிலான சமூக பணியாகும். அதன் மற்றுமொரு பகுதியாக, பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையில் மற்றும் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் துபாராமயவில் இந்த சமூகம் சார்ந்த அபிவிருத்திப் பணிக்காக கடற்படை தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இயலுமைப்படுத்தியது.

அதன்படி இன்று (2023 அக்டோபர் 18,) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தூபாராம விஹாரயவுக்கு வரும் பக்தர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யப்படும். மேலும், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 15000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வுக்கு இணையாக கடற்படைத் தளபதி, அடமஸ்தானாதிபதி கண்டி கலாவிய பிரதம சங்கநாயக, சாஹித்யசூரி அதிகௌரவரஹ பல்லேகம ஹேமரதனாபிதான தேரர், ருவன்வெளி மஹா சாய விஹாரயவின் தலைமை தேரர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஈதல வெடுனுவேவே ஞானதிலக தேரர் மற்றும் துபாராம சைத்தியராமாதிகாரி வணக்கத்திற்குரிய கஹல்லே கானிநந்த தேரர் உட்பட தலைமை தேரர்களுக்கு பிரிகாரை வழங்கி ஆசிவாதங்கள் பெற்றார்.

மேலும், அடமஸ்தானாதிபதி கண்டி கலாவிய பிரதம சங்கநாயக, சாஹித்யசூரி அதிகௌரவரஹ பல்லேகம ஹேமரதனாபிதான தேரர், துபாராம சைத்தியராமாதிகாரி வணக்கத்திற்குரிய கஹல்லே கானிநந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை தலைமையகத்தில் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.