அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்ப்பு

2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium - ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். அங்கு, அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் துணைத் தளபதி, அட்மிரல் Lisa M. Franchetti, அமெரிக்காவின் கடலோர காவல்படையின் தளபதி, அட்மிரல் Linda L. Fagan, அமெரிக்காவின் பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் Samuel J. Paparo மற்றும் அமெரிக்க கடற்படைத் மத்திய கட்டளையின் தளபதி வைஸ் அட்மிரல் Brad Cooper உட்பட பிராந்திய மற்றும் பிராந்தியம் அல்லாத மாநிலங்களின் கடற்படைத் தலைவர்கள் மற்றும் கடலோரக் காவல் படைத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

2023 செப்டம்பர் 19 முதல் நான்கு நாட்களாக (04) நடைபெற்ற 25வது கடல்சார் சக்தி மாநாடு, "ஒருங்கிணைவு மூலம் பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு 1969 ஆண்டுடில் தொடங்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களுக்கு மிகச் சிறந்த தளத்தை உருவாக்கும் இந்த சர்வதேச மாநாடு, பங்குதாரர்களுக்கு கடல்சார் பாதுகாப்பிற்காக கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து கடல்சார் வல்லரசுகளும் ஒன்றுகூடும் ஒரே மாநாட்டாக இந்த கடல்சார் சக்தி மாநாடு கருதப்படுகிறது, மேலும் இந்த மாநாடு கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதற்கான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பெரும் ஆதரவைத் தருகிறது.

பிராந்திய மற்றும் பிராந்திய அல்லாத கடல்சார் சக்திகளை ஒன்றிணைக்கும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலம், பங்குதாரர்களிடையே மேம்பட்ட ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில், கடல்சார் களத்திற்குள் உள்ள பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்கள் உட்பட, பகிரப்பட்ட கடல்சார் கவலைகளை நிவர்த்தி செய்வதில் இலங்கை கடற்படைக்கு அதன் எதிர்கால பங்களிப்புகளை மேம்படுத்த உதவுகிறது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கடற்படை போர் கல்லூரியின் முன்னாள் கல்வியாளராவார். மேலும், கடற்படை கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியை கடற்படைப் பணியாளர்கள் பாடசாலையில் 2004 ஆம் ஆண்டு முடித்ததுடன் பாதுகாப்பு ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்றார். இதன்படி, 25ஆவது கடற்படை சக்தி மாநாட்டில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி, அமெரிக்காவின் கடற்படைப் போர் அகாடமிக்கு விஜயம் செய்து, அகாடமியின் தற்போதைய அதிபராக உள்ள ரியர் அட்மிரல் Peter A. Garvin அவர்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.