சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்துடன் இணைந்து கடற்படையால் சதுப்புநில நடவு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

ஜூலை 26 ஆம் திகதி ஈடுபட்ட சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, 2023 ஜூலை 14 மற்றும் 21 ஆம் திகதிகளில் கல்பிட்டி கப்பலாடி பிரதேசத்திலும் மல்வத்துஓய முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சதுப்புநில மர நடுகைத் திட்டமொன்றை கடற்படையினர் மேற்கொன்டனர்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடற்படையின் சதுப்புநில பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஆறுகள், முகத்துவாரங்கள் மற்றும் தடாகங்களை உள்ளடக்கும் வகையில் கடற்படையினர் சதுப்புநிலங்களை நடவு செய்து வருகின்றனர். இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பல்களான விஜய மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்களான தேரபுத்தவின் கடற்படையினரால் இந்த சதுப்புநில நடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் சதுப்புநில சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்களின் இனப்பெருக்க சூழலை உருவாக்கும் இந்த சதுப்புநில சூழல், மீனவ சமூகத்திற்கு பல நன்மைகளை தருகிறது, மேலும் கார்பன்டை ஆக்சைட் மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்கள் சதுப்புநில தாவரங்களால் உறிஞ்சப்படுவதால், அந்த சூழலை பாதுகாத்து விரிவுபடுத்துவது புவி வெப்பமடைதலை நீண்டகாலமாக கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

மேலும், கடலோரப் பகுதிகளிலிருந்து கடலுக்குக் கழிவுகளை வரம்பிடுதல், இயற்கை காரணங்களால் ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள் மற்றும் கரைகளின் கரையோரச் சூழல் அரிப்பைத் தடுத்தல், காற்றைச் சுத்தப்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு அதிக பங்களிப்பை ஆற்றி வருகிறது.