கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையில் திருகோணமலை தெற்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஜூலை 01 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட திருகோணமலை தெற்குப் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த பகுதியில் கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நலன்புரி வசதிகளை அவதானித்தார். மேலும் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, கால அவகாசம் மற்றும் சவால் முகாமைத்துவம் பற்றி குறித்து திருகோணமலை தெற்கு பிராந்திய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு விளக்கமளித்தார்.

இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, கட்டளைத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் திருகோணமலை தெற்கு கடற்படை கட்டளையின் பொறுப்பதிகாரி கொமடோர் அசங்க ரதுகமகே ஆகியோருடன் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்படைத் தளபதி இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிறுவகத்தின் உத்தியோகத்தர் இல்லத்தில் அதிகாரிகளால் வழங்கப்பட்ட நிகழ்வொன்றில் கழந்துகொண்டு அதன் பின் திருகோணமலை தெற்கு பிரதேசத்தின் கடற்படை நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் விளக்கக்காட்சியில் பங்கேற்று கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் தற்போதைய சவால்களை நிர்வகித்தல் குறித்து உரையாற்றினார்.

திருகோணமலை தெற்கு பகுதியின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை உரையாற்றிய கடற்படைத் தளபதி, நாடு சவாலான காலகட்டத்தை கடந்து படிப்படியாக மீண்டு வருகின்ற இக் காலப் பகுதியில் வெளி நபர்களின் குறுகிய சமூக-அரசியல் தாக்கங்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, வருமானத்திற்கு ஏற்ப செலவினங்களைக் கட்டுப்படுத்தி தமது தனிப்பட்ட நிதி விவகாரங்களை சிறந்த முகாமைத்துவத்துடன் முன்னெடுப்பதும் காலத்தின் தேவை எனவும், அதிகரித்த உதவித்தொகை மூலம் கடற்படையினருக்கு நிவாரணம் வழங்கியுள்ள பின்னணியில் பல்வேறு நபர்களால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களின் அடிப்படையில் கடற்படையை விட்டு வெளியேற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

கடற்படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்கள் குடும்பம், பாடசாலை மற்றும் சமுதாயம் ஆகியவற்றில் இருந்து தாங்கள் வளர்த்துக் கொண்ட நல்ல பண்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேலும் மேம்படுத்தி ஒருவருக்கொருவர் நல்ல உறவைப் பேண வேண்டும், மேலும் தங்கள் பிரச்சினைகளுக்கு அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, துறையின் மூலம் தீர்வு காண வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு குறுக்குவழிகள் மூலம் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு கடற்படையினரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதையும் கடற்படையின் நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என கடற்படைத் தளபதி வலியுறுத்தினார். அத்துடன், வெளி தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான புரிதலுடன் கையாள வேண்டும் எனவும், அரசமைப்பு ரீதியாக அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஆதரிப்பதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்ற கடற்படையினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

மேலும், இந்தக் கண்காணிப்புப் பயணத்தின் போது, கடற்படைத் தளபதி திருகோணமலை தெற்கு பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காஷ்யப, இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபடுன, கடற்படை இணைப்பு மட்டக்களப்பு மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் வாழைச்சேனை மீன்பிடி கண்காணிப்பு நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நலன்புரி வசதிகளை அவதானித்தார். கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மிகவும் திறமையாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.