கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் மற்றும் கேடட் அதிகாரிகள் 67 பேர் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்களைப் பெற்றனர்

இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 65 வது கேடட் ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் முப்பத்தைந்து பேர் (35), தன்னார்வ கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் இருபத்தி ஒன்பது பேர் (29) மற்றும் பல்கலைக்கழக ஆணைகளை பெற்ற மூன்று (03) கேடட் அதிகாரிகள் உட்பட 67 பேருக்கு இன்று (2023 ஜூன் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, இலங்கை நிரந்தர கடற்படையின் 35 அதிகாரிகள், நிர்வாக, பொறியியல், வழங்கல், மின் மற்றும் மின்னணு, கடற்படை காலாட்படை, ஒழுக்கம் ஆகிய பிரிவுகளுக்கும். தன்னார்வ கடற்படைப் படைக்கு நேரடி நுழைவு செய்யப்பட்ட 29 அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கைக்கு தகுதி பெற்ற 03 கேடட் அதிகாரிகள் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.

இங்கு உரையாடிய கடற்படை தளபதி முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், கடற்படைத் தளபதி, தமது பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு பெற்றோர்கள் கணிசமான தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்ததோடு, கடற்படையில் இணைவது அவர்கள் செய்த மிகச் சிறந்த தெரிவுகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடற்படையில் சேவையாற்றுவது வெறும் வேலையல்ல, நாட்டிற்கு செய்யும் உன்னத சேவையாகும் என வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறிப்பிட்டார். புதிதாகப் பட்டியலிடப்பட்ட இந்த தனிநபர்கள் இந்த உன்னதக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் அர்ப்பணிப்பின் அளவை அவர் வலியுறுத்தினார், இது தேசிய பெருமையின் உணர்வை வளர்க்கிறது. கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு அவர்களின் தொழில்முறைத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் குறித்து மேலும் நினைவுபடுத்தினார். எதிர்காலத்தில் திறமையான தலைவர்களாகத் திகழ்வதற்கு, அவர்களின் தொழில்முறை, குணாதிசயங்கள் மற்றும் தலைமைத்துவ திறன்களை வடிவமைப்பதற்கு கடற்படை சிறந்த இடமாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். நிறைவில், கடற்படைத் தளபதி, பிள்ளைகள் கடற்படையில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்த பெருமைக்குரிய பெற்றோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, வெற்றிகரமான கடற்படை வாழ்க்கையைத் தொடரத் தங்கள் பிள்ளைகளுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கடற்படையின் பிரதானி, ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, பணிப்பாளர் நாயகங்கள், கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் புதிதாக பட்டியலிடப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.