இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘INS Vagir’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 22) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க புறப்படும் ‘INS Vagir’ நீர்மூழ்கி கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் திவாகர் எஸ் (Commander Divakar S) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையில் கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றதுடன் குறித்த கப்பலின் கடற்படையினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளில் கழந்து கொண்டனர் மேலும் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட்டனர்.
2023 ஜூன் 21 ஆம் திகதி ஈடுபட்ட 9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் இணைந்து யோகா நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே அவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையில் நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மேலும், 2023 ஜூன் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்டார், அங்கு கடற்படைத் தளபதி மற்றும் INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரி இடையே நினைவு சின்னங்கள் பரிமாற்றப்பட்டது.
மேலும், இலங்கை கடற்படையின் உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேசிய கெடட் படையின் உறுப்பினர்கள் 'INS Vagir' என்ற நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் பிராந்திய கடற்படையினரின் இத்தகைய வருகைகள் நட்பு மற்றும் ஒத்துழைப்பை கணிசமாக மேம்படுத்தும், பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள உதவும்.