இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறக்கப்பட்டது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், அங்கு பயணிகள் முனையம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் திறந்து வைப்பு இன்று (2023 ஜூன் 16) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கௌரவ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு கடற்படையிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், காங்கேசன்துறை துறைமுகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகள் 2023 பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து சேவை மூலம் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் குடியேற்றம் மற்றும் சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல், ஜெட்டியை பழுதுபார்த்தல் மற்றும் நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பிற வசதிகளை நிறுவுதல் ஆகியவை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் வழங்கப்பட்டன.
அதன்படி, கடற்படை சிவில் பொறியியல் அதிகாரிகளின் மேற்பார்வையில் பூர்த்தி செய்யப்பட்ட காங்கசந்துறை துறைமுகத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து முனையம் மற்றும் பிற வசதிகள் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக இன்று (2023 ஜூன் 16) திறந்து வைக்கப்பட்டதுடன் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த முதல் சொகுசு பயணிகள் கப்பலான "MV Empress" இன் கேப்டன் மற்றும் செயல்பாட்டு ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பித்து வசதிகளை நிர்மாணிப்பதற்கும், நிறுவுவதற்கும் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புக்கு விசேட பாராட்டு தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக பயணிகள் படகு சேவை திட்டம் உள்ளது. இந்த முயற்சியில், கடற்படையின் ஈடுபாடு கணிசமான செலவு சேமிப்புக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், எதிர்பார்க்கப்பட்ட திட்டப் பலன்களை பொதுமக்களுக்கு வழங்குவதையும் துரிதப்படுத்தியது.
மேலும், இந் இந்நிகழ்வில் வடமாகாண அரச அதிகாரிகள் உட்பட துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.