ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கடற்படையினருக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. மேலும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜூன் 12) கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
ஆஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்பு மண்டலத்திக்கு சொந்தமான ஆழ்கடலில் கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடி கப்பலை தேடும் மற்றும் மீட்பு பணிக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கமைய இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு குறித்த கப்பல் உள்ள கடல் பகுதிக்கு 2023 மே மாதம் 17 அனுப்பப்பட்டதுடன் 2023 மே மாதம் 20 ஆம் திகதி கப்பலின் சுழியோடி பிரிவினர் மூழ்கிய மீன்பிடி கப்பலுக்குள் இன்னும் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பணியாளர்களை மீட்பதற்காக சுழியோடி நடவடிக்கையைத் தொடங்கியது.
குறித்த கடற்பகுதியின் கடுமையான தன்மைக்கு மத்தியில், கடற்படையின் சுழியோடி குழுவினர் மூன்று (03) நாட்கள் மிகவும் கடினமான சுழியோடி நடவடிக்கையை மேற்கொண்டனர், மீன்பிடிக் கப்பலின் தங்குமிடப் பகுதியில் இரண்டு (02) சடலங்களைக் கண்டுபிடிக்கவும் மற்ற அறைகளில் சிதைந்த 12 சடலங்களையும் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தனித்துவமான இந்த சுழியோடி நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் விசேட பாராட்டைப் பெற்றதுடன் இந்த சுழியோடி நடவடிக்கைக்கு பங்களித்த லெப்டினன்ட் கமாண்டர் (சுழியோடி) இந்திக சுபசிங்க, சிரு அதிகாரி (சுழியோடி) கே.பி.ஏ.அருணஜித், சிரு அதிகாரி (சுழியோடி) ஈ.எம்.டீ.ஏ ஏகநாயக்க, சிரு அதிகாரி (சுழியோடி) டி.டி.என் ஜெயதிஸ்ஸ, கடற்படை வீரர் (சுழியோடி) எச்டி தர்ஷன, கடற்படை வீரர் (சுழியோடி) என்.எம்.சி.எல் நாராயண, கடற்படை வீரர் (சுழியோடி) ஐ.டி.எல்.எம் திசாநாயக்க, கடற்படை வீரர் (சுழியோடி) டப்.டப்.என்.சீ சந்தருவன் மற்றும் கடற்படை வீரர் (சுழியோடி) ஆர்.எஸ்.குமாரகே ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு, தொழில்சார் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி அவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் இன்று (2023 ஜூன் 12,) கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
கடலில் பாதிக்கப்படும் கப்பல்களின் மற்றும் படகுகளில் உள்ள கடற்பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மரபுகளுக்கு இணங்க, கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் அருகிலுள்ள கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பகுதிகளில் கடல் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.