கடற்படைத் தளபதி வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்கு விஜயம்
தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (18 மே 2023) வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்குச் (Anchorage Naval Care Center) சென்று புனர்வாழ்வில் தங்கியிருக்கும் கடற்படை வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின் போது கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களும் கலந்துகொண்டார்.
தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்காக மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவி வந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது 1160 கடற்படை வீரர்கள் உயிர் இழந்தனர், அதே நேரத்தில் 517 கடற்படை வீரர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஊனமுற்றுள்ளனர்.
ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்தில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொள்வதற்கான நேரத்தைக் கண்டறிந்த கடற்படைத் தளபதி அவர்கள் நலம் விசாரித்து இன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவருடன் இணைந்து கடற்படை சேவா வனிதா பிரிவினால் வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளை கடற்படை போர் வீரர்களுக்கு வழங்கி வைத்தார்.
மேலும், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.