கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளுக்காக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) சிறப்புரையாற்றினார்

கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவுரைகளின் தொடரில் ஆறாவது விரிவுரை ‘ Location, Location, and Location: Defence Diplomacy & Indo Pacific Strategies for Sri Lanka’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படையின் 20வது தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) அவர்களால் 2023 மே 13 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கர்ணகொட கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.

இதன்படி, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சிபெறும் அதிகாரிகள் உட்பட கிழக்கு கடற்படை கட்டளையின் இளம் அதிகாரிகளின் அறிவை விரிவுபடுத்துவதற்கு தேவையான முக்கிய விஷயங்களை முன்வைத்தது. தற்போதைய பூகோள காலநிலை மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் புவியியல் நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளில் பங்குகொள்ளும் இளம் அதிகாரிகள் அதனைப் பயன்படுத்தி தாய்நாட்டிற்கு சேவையாற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட கடற்படையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.