ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த இன்று (2023 மார்ச் 24) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்தவிற்கு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான கடற்படை முகாமைத்துவ சபையினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பின் ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த கடற்படையின் பாரம்பரிய முறைப்படி சிறப்பு மரியாதையுடன் பிரியாவிடை பெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படும் போது அவருக்கு சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் வீதியின் இருபுறமும் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

1989 ஆம் ஆண்டு ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 07வது உள்வாங்கல் பிரிவில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவர் கடற்படைப் பயிற்சியின் பிரதிப் பணிப்பாளர், கடற்படைப் பொறுப்பதிகாரி (தீவுகள்), கேப்டன் நடவடிக்கை துறை (மேற்கு), இந்தோனேசியா, ஜகார்த்தாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆலோசகர் (பாதுகாப்பு), பணிப்பாளர் நாயகம் சேவைகள், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் பணிப்பாளர் கடற்படைப் பயிற்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.