கடற்படையினருக்கு பணம் கொடுத்து தப்ப முயன்றவர்களை கைது செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு

திருகோணமலை புல்முடை ஜின்னபுரம் கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதற்கு கடற்படையினருக்கு பணம் கொடுக்க வந்த இருவரை (02) கைது செய்த கடற்படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, இன்று (2022 ஒக்டோபர் 28,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி மற்றும் வலகம்பா நிருவனங்களின் கடற்படையினர் இணைந்து 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிற்பகல் புல்முடை ஜின்னபுரம் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள இந்த விசேட நடவடிக்கையின் போது குறித்த கடற்பரப்பில் டைனமைட் ரக வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) மற்றும் ஒரு படகு கைது செய்யப்பட்டது.

அங்கு, கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடக் கூறி ஒரு இலட்சம் ரூபா (ரூ. 100,000.00) இலஞ்சம் வழங்க வந்த இருவரும் (02) அவர்கள் வந்த டிங்கி படகையும் கைது செய்தனர்.

பின்னர், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு டிங்கி படகுகளை (02) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஒரு இலட்சம் ரூபா (ரூ. 100,000.00) பணம் புல்முடை காவல் நிலையத்திடம் கையளிக்கப்பட்டது.

தனிப்பட்ட ஆதாயம் பாராமல் கடமை, துணிச்சல், நேர்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, சட்ட விரோத செயல்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்து, வெளி சமூகத்தின் பார்வையில் கடற்படையின் நற்பெயரை காத்த கடற்படை வீரர் எச்.எம்.எஸ்.குமார, கடற்படை வீரர் டீ.பீ.ஜி.என் ஜயசேன மற்றும் கடற்படை வீரர் எஸ்.டீ.டீ.எல்.டீ திஸாநாயக்க ஆகியோருக்கு அவர் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.