தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU) திறக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்பும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் நன்கொடைகளுடன், காலி, பூஸ்ஸ தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU), கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில், 2022 அக்டோபர் 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் காலி, பூஸ்ஸ கடற்படை தளத்தில் 250 படுக்கைகள் கொண்ட இடைநிலை சிகிச்சை மையமொன்று 2021 ஆண்டில் மே மாதம் கடற்படையினரால் நிறுவப்பட்டது. அதன் படி குறித்த இடைநிலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில், தீவிரக் கண்காணிப்புப் பிரிவின் (High Dependency Unit- HDU) கட்டுமானப் பணி 2021 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த தீவிரக் கண்காணிப்புப் பிரிவை நிறுவுவதற்குத் தேவையான சிறப்பு மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளை பரிசோதிக்கும் இயந்திரங்கள், சிறப்பு வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுக்கான பொருள் மற்றும் நிதி உதவி சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி, (Citizens Development Business Finance PLC), நிருவனம், தஹம் பஹன அமைப்பு, மருத்துவமனை சேவை வாரியம் மற்றும் 'மோர 92 குழு மற்றும் காலி ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க தெரப்பனன் ஆகியோரினால் வழங்கப்பட்டன.

இதன்படி, இந்த தீவிரக் கண்காணிப்புப் பிரிவை ஸ்தாபிப்பதன் மூலம் எதிர்காலத்தில் தேசியத் தேவையின் போது கடற்படையினர் சுகாதார சேவைக்குத் தேவையான ஆதரவை வழங்க முடியும்.

மேலும், இந்த தீவிர கண்காணிப்புப் பிரிவைத் திறந்து வைப்பதற்காக, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரவீந்திர மெதகொட, தெற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஹரீந்திர ஏகநாயக்க, சுகாதார சேவைகளின் துணை/ பணிப்பாளர் நாயகம் டாக்டர் கொமடோர் பி.ஜே.பி மரம்பே, கட்டளை மருத்துவ அதிகாரி டாக்டர். சாலிய ஜயசுமண உட்பட தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டனர். மேலும், இந்த தீவிர கண்காணிப்பு பிரிவை நிறுவுவதற்கு ஆதரவளித்த வைத்தியசாலை சேவை சபையின் ஸ்தாபகரான வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர், காலி ஆயரை பிரதிநிதித்துவப்படுத்தும் தந்தை ருவன் பிரசாத், சிட்டிசன் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்சியல் பிரைவேட் நிறுவனத்தின் வர்த்தக அபிவிருத்தி பணிப்பாளர் திரு.ஷசீந்திர முனசிங்க மற்றும் கராப்பிட்டிய மற்றும் மஹமோதர போதனா வைத்தியசாலையின் மருத்துவ குழுவினரும் கலந்துகொண்டனர்.