பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்
குரூப் கேப்டன் அமீன் கான் (Group Captain Amin Khan) தலைமை கொண்ட பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் மாணவ அதிகாரிகளும் கல்விப் பணியாளர்களும் அடங்கிய 43 பேர் கொண்ட குழுவினர் 2022 அக்டோபர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பணியாளர் பாடநெறியின் கீழ், அவர்களது 06 நாள் வெளிநாட்டு ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 01 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர். 43 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் 38 பங்களாதேஷ் முப்படை மாணவ அதிகாரிகள் உள்ளனர்.
பங்களாதேஷ் தூதுக்குழுவின் தலைவர் குரூப் கப்டன் அமீன் கான் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கடற்படை தலைமையகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர், கொமடோர் புத்திக லியனகமகே, இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் பணி குறித்து பங்களாதேஷ் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார். கடற்படையின் பிரதானி மற்றும் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மகிந்த மஹவத்த ஆகியோருடன் கல்விசார் விடயங்கள் தொடர்பிலும் தூதுக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.