கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

2022 பெப்ரவரி 12 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனதிற்கு சென்ற கடற்படைத் தளபதி வெடித்தலத்தீவு கடற்படை முகாம், இரணைமாதா மற்றும் நச்சிக்குடா II என்ற கரையோர கண்காணிப்பு நிலையங்களை பார்வையிட்டார். இதை தொடர்ந்து இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்திற்கு விஜயம் செய்த அவர், தால்பாடு மற்றும் ஒலுதுடுவாய் கடற்படைப் பிரிவின் எல்லைக்குட்பட்ட கரையோர கண்காணிப்பு நிலையங்களின் தற்போதைய நிலையையும் மதிப்பாய்வு செய்தார்.

இந்த விஜயத்தின் போது, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கரையோரப் பகுதிகளில் நடைபெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு, செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் கடற்படைத் தளபதி வழங்கினார். அதன் பின், தால்பாடு கடற்படை முகாமுக்கு சென்ற கடற்படை தளபதி வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான கடலோர ரோந்துப் படகுகளின் செயற்பாட்டுத் திறனை மேற்பார்வையிட்டார். கடற்படைத் தளபதி கடலோரக் காவல்படை படகுகளில் கடமையாற்றும் மாலுமிகளை அழைத்துப் பேசியதுடன், அப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில், வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரை உரையாற்றிய கடற்படை தளபதி, தற்போதைய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியிலும் வட மத்திய கடற்படை கட்டளையின் திறமையான மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பாராட்டினார். கடல் வழிகள் ஊடாக வெளிவரும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு, பாரிய சவால்களுக்கு மத்தியிலும், எப்பொழுதும் செயற்படுவதற்கு தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை கடற்படைத் தளபதி மேலும் சுட்டிக்காட்டினார். எனவே, இதுபோன்ற பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற தேவையான வழிகாட்டுதல்களை அவர் வழங்கினார்.

அனைத்து கடற்படையினரும் தமது கடமைகளை மிகவும் ஒழுக்கத்துடனும், சீரான கடமையுடனும், தெளிவான மனதுடன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மாலுமிகள் பிரிவுகளின் முறையான ஒழுங்கைப் பேணுவதுடன், இளைய மாலுமிகளின் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறிய கடற்படை தளபதி, சிரேஷ்ட மாலுமிகளுக்கு இதில் பெரும் பொறுப்பு இருப்பதாகவும் வலியுறுத்தினார். கடற்படையின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சரியான உடல் தகுதியைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.

தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்துக்காக வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் சுஜிவ செனவிரத்ன, வட மத்திய கடற்படை கட்டளையின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கட்டளையில் உள்ள நிருவனங்களில் கட்டளை அதிகாரிகள் உட்பட கட்டளையுடன் இணைக்கப்பட்ட மாலுமிகள் கலந்து கொண்டனர்.