வடக்கு தீவுகளுக்கான வடக்கு மாகாண புதிய ஆளுநரின் விஜயத்துக்கு கடற்படையின் உதவி
வடமாகாண ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ. ஜீவன் தியாகராஜா அவர்கள் 2021 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.
அதன்படி, வடக்கில் உள்ள தீவுவாசிகளின் பொருளாதார, சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழங்கப்பட வேண்டிய நிர்வாக உதவிகளை ஆராயும் நோக்கில் வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, வடக்கு கடற்படை கட்டளையின் மூலம் எழுவத்தீவு, அனலைதீவு, பாலைதீவு, ககரைதீவு மற்றும் கச்சத்தீவு ஆகிய தீவுகளுக்குச் செல்ல தேவையான வசதிகள் வழங்கப்பட்டன.
இந்த விஜயத்தின் போது, நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவுக்கு அருகில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதில் கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் பங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி கௌரவ ஆளுநருக்கு விளக்கமளித்தார்.
இந்த விஜயத்தின் போது கௌரவ ஆளுநர் அவர்கள் பொதுவாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக தீவுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தார். பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், வடக்கு கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர காவல்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.