கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் கடற்படை வீரர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்
கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் உட்பட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 05 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக முதலில் அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரருடன் இந்த 05 கடற்படை வீரர்களும் வெலிசர கடற்படை தளத்தில் பணியாற்றினார்கள். வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் கடற்படை வீரர் விடுமுறையில் இருந்தபோது காய்ச்சல் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற நான்கு கடற்படை வீரர்களும் கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஹோமாகம மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தபோது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் படி அவர்களின் உடலில் வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, எனவே அவர்கள் 2020 மே 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
அதன்படி, இந்த 05 நபர்கள் உட்பட, 21 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்த பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், வெளியேறிய இந்த கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.