சர்வதேச வணிக கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவர் கடற்படையால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டது

சர்வதேச வணிக கப்பலான MV Menkar கப்பலில் பணியாற்றிய ஒரு இந்திய நாட்டவர் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் அவரை இன்று (2020 ஏப்ரல் 15) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜிபூட்டி (Djibouti) குடியரசில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலான MV Menkar கப்பலில் பணியாற்றிய ஒரு இந்திய நாட்டவர் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் மருத்துவசிகிச்சையளிக்க கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவர உதவுமாறு கப்பலின் உள்ளூர் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கோரியுள்ளது. அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ், நோயாளியை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் உள்ள MV Teamclio என கப்பலை அணுகி, சுகாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது. இதனையடுத்து, ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார். ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையும் இந்த பொறுப்பான பணியைச் செய்வதற்கு கடற்படைக்கு தங்களது உறுதியற்ற ஆதரவை வழங்கின.