பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் 'நிஷான் ஏ இம்தியாஸ் எனும் அதிஉயர் இராணுவ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநாகரான இஸ்லாமாபாத்தில் நேற்றய தினம் (பெப்ரவரி, 13) நடைபெற்ற விஷேட நிகழ்வில் போதே பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியினால் இந்த உயர் இராணுவ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தில் போரியல் இளமாணி கற்கைநெறியில் (பிஎஸ்சி) பட்டம் பெற்றமை, சிறியரக படகுகள் மற்றும் யுத்த கடல் நடவடிக்கை தொடர்பாக நிபுணத்துவம் பெற்றுள்ளமை மற்றும் கடற்படையின் விஷேட படகுப்பிரிவை ஆரம்பித்தமை என்பவற்றை கருத்திற்கொண்டே மேற்படி உயர் பதக்கத்தை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானில் போரியல் இளமாணி கற்கை தொடர்பில் பிஎஸ்சி பட்டம் பெற்ற இலங்கையின் முதலாவது அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தலைநகர் லாஹூரிலுள்ள கடற்படை போரியல் கல்லூரியின் நிரந்தர வருகை தரும் விரிவுரையாளராக செயற்பட்டு வரும் இவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலம் தொடக்கம் தற்பொழுது வரை இரு நாட்டு இராணுவ உறவை மேம்படுத்த செயற்பட்டுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு இரு தரப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவாரத்தை என்ற மாநாட்டையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
'நிஷான் ஏ இம்தியாஸ்' என்ற பதக்கமானது நாட்டிற்காக சேவையாற்றுபவருக்கு அவரது சேவையை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் பதக்கங்களில் ஒன்றாகும்.
இந்த விருது வெளிநாட்டு தலைவர்களுக்கும், இராணுவத்தின் ஜெனரல், கடற்படையின் அட்மிரல் மற்றும் விமானப் படையின் எயார் சீப் மார்ஷல் (Air Chief Marshal) தரங்களில் உள்ளவர்களுக்கும் மாத்திரமே வழங்கப்படுகின்ற உயர் விருதாகும். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியினால் வழங்கப்படும் பிரசிடேன்சியல் மெடல் ஒப் ப்ரீடம் (Presidential Medal of Freedom -USA) மற்றும் பிரித்தானியாவினால் வழங்கப்படும் ஓடர் ஒப் பிரிட்டிஷ் எம்பயர் (Order of British Empire -UK) என்ற பதக்கங்களுக்கு சமமானதாகும்.