கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது
 

முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறா மீன்(Whale shark – Rhincodon typus), இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் காப்பற்றப்பட்டு மீண்டும் அது கடலில் கொண்டு சென்று விடப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (செப்டெம்பர், 10) இடம்பெற்றது.

மேற்படி சம்பவம் தொடர்பாக கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளையகமான எஸ்எல்என்எஸ் கோட்டபாயவிற்கு முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தினால் அளிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இலங்கை கடற்படை வீரர்களினால் கரையொதுங்கிய சுறா மீனினம் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் கொண்டு விடப்பட்டது. நிர்கதியான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த அரிதான உயிரின வகையைச் சேர்ந்த இம்மீன், மூன்று கடல் மைல் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது. வெள்ளைப் புள்ளிச் சுறா மீனினம், உலகில் காணப்படும் மிகப்பெரிய உயிரின வகையாகும். வடிகட்டல் முறை உணவுப்பழக்கத்தையுடைய இம்மீனினம் கடலில் அலையும் பிலாந்தன்களை உணவாக உட்கொள்கின்றன. வெப்ப மற்றும் இடைவெப்பவலய சமுத்திரத்தில் வாழும் இவ்வுயிரினம் சுமார் 70 ஆண்டுகள் ஆயுர்காலத்தைக் கொண்டவை. இலங்கை கடற்பரப்பில் இம்மீனினத்தை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.