கடற்படையின் மரைன் குழுவினர் ரிம்பக்- 2018 கடல்சார் பயிற்சியில் பங்கேற்க நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியா வில் இடம்பெற இருக்கும் அமெரிக்காவின் “ரிம் ஒப் தி பசிபிக் (RIMPAC) – 2018” கடல்சார் கூட்டுப்படை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் 25 பேர் கொண்ட இலங்கை கடற்படையின் மரைன் குழுவினர் அண்மையில் (மே, 21) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறான பயிற்சியில் இலங்கை கடற்படையின் மரைன் குழுவினர் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.அமெரிக்க கடற்படை நடத்தும், RIMPAC-2018 எனும் கடல்சார் கூட்டுப்படை பயிற்சியானது உலகில் மிகப்பெரிய ஒரு கடல்சார் பயிற்சியாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் “ரிம்” பயிற்சியானது ஜூன் 28 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 04ஆம் திகதி வரை ஹவாய் தீவில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
"திறன், தகவமைப்பு, பங்குதாரர்கள்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் ரிம்பக்- 2018ஆம் ஆண்டுக்கான கடல்சார் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாடுகள், கடல்சார் படையினரின் உள்ளார்ந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் பரந்தளவிலான திறன்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைவதுடன், அனர்த்த நிவாரண, கடல்சார் பாதுகாப்பு, இருநாட்டு கடற்படை நடவடிக்கைகள், கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள், வெடிபொருட்களை அகற்றல், சுழியோடி நடவடிக்கைகள் மற்றும் ஆபத்தில் இருந்து கப்பலை காப்பாற்றும் நடவடிக்கைகள் ஆகிய பல செயற்பாடுகள் உள்ளடங்கியதாக இப்பயிற்சிகள் அமைய உள்ளது.