2017ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்க சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வுக்கு "சயுறால" பயணம்
 

இலங்கை கடற்படையின் மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுறால தாய்லாந்தில் இடம்பெற உள்ள 2017ஆம் ஆண்டுக்கான தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று (நவம்பர் 09) நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்திலிருந்து 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 109 கடற்படை வீர்ர்களுடன் புறப்பட்டுச் சென்ற “சயுறால” எனும் கடற்படை கப்பல் இவ்வருடம் (2017) ஆகஸ்ட் மாதம் கப்பற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், இதன் முதலாவது வெளிநாட்டு கடற்பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த இச்சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வு தாய்லாந்தின் பட்டயாவில் இம்மாதம் (நவம்பர்) 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இன் நிகழ்வு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறுவதுடன், கப்பற்படை மீளாய்வு மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் 19 தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 26 கடற்படை கப்பல்கள் கலந்துகொள்ள உள்ளன.