அமெரிக்க நிமிட்ஸ் விமானம் தாங்கிக்கப்பல் குழு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அமெரிக்காவிற்கு சொந்தமான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமான போக்குவரத்து கப்பல் உள்ளிட்ட கப்பல்களான யுஎஸ் எஸ் எஸ் நிமிட்ஸ், யுஎஸ் எஸ் எஸ் பிரின்ஸ்டன்,யுஎஸ் எஸ் எஸ் ஹோவார்ட், யுஎஸ்எஸ் ஷோப், யுஎஸ் எஸ் பிங்க்னி, மற்றும் யூஎஸ்எஸ் கிட் ஆகிய விமானங்களை தாங்கிச்செல்லும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் குழுவினர் இன்று (ஒக்டோபர், 28) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளனர். வருகைதந்தவர்களை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றதுடன், இந்நிகழ்விற்கு கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கொமடோ சஞ்சீவ டயஸ் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர்.

1985 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் விமான போக்குவரத்துக் கப்பல், இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான நல்லுறவினை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் நிறைவுற்ற கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இக்கப்பல் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த கப்பலான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் 333 மீட்டார் நீளமுடையதும், 5,000 பேருக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டுள்ளதாகவும், போர் விமானங்கள் மற்றும் ஓடுபாதை என்வற்றை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், யு.எஸ்.எஸ். நிமட்ஸ் இனை பார்வையிடுவதற்காக அமெரிக்க கடற்படையின் பிளாக் ஹாக் உலங்குவானூர்தி மூலம் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர், மாண்புமிகு மஹிந்த சமரசிங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன ஆகியோர் நேற்று (ஒக்டோபர், 27) விஜயம் செய்தார்கள். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு அடுல் கேஷப், கடற்படை பிரதானி எட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கடற்படை பொது நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் அட்மிரல் பியால் டி சில்வா, மற்றும் பல சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இணைந்துகொண்டனர்.

இதேவேளை, கப்பல்களின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், குறித்த இக்கப்பல்கள் தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜஜத்தை நிறைவுசெய்து எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர், 31) நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.