கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி (JCET) திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவு
திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கடற்படையின் திருகோணமலை கடற்படை கப்பல் பட்டறையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.
குறித்த இக்கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் புளோட்டிலா – நான்காவது விரைவு தாக்குதல் பிரிவிலிருந்து 12 படைவீரர்களும் விஷேட தாக்குதல் பிரிவிலிருந்து 24 படைவீரர்களுமாக மொத்தம் 36 படைவீரர்கள் பங்குபற்றினர். இப்பயிற்சி நெறி அமெரிக்க விஷேட படைப்பிரிவின் அல்பா 1333 நடவடிக்கை இணைப்பு இராணுவ வீரர்களால் ஏப்ரல் மாதம் 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பயிற்சி நெறியின் நிறைவு வைபத்தில் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னைய்யா அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெரிக்காவின் விஷேட படைப்பிரிவு இராணுவத்தினருக்கு பாராட்டு சான்றிதழ்களை கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத்தளபதி வழங்கி வைத்ததுடன் முக்கியத்துவமிக்க அறிவினை இலங்கை கடற்படையினருடன் பகிர்ந்துகொண்டமைக்கு தனது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.