கடற்படையினரால் மேலும் மூன்று நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிப்பு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுரம் துருவில வித்தியாலயம், தம்புத்தேகம மத்திய கல்லூரி, வவுனியா அழகல்ல ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேற்படி சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றைய தினம் (27) மக்கள் பாவனைக்கென வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம், அழகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 345 குடும்பங்கள், துருவில வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 480 மாணவ மாணவிகள் அதனைச்சூழவுள்ள 680 குடும்பங்கள், தம்புத்தேகம மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 1,870 மாணவர்கள் மற்றும் அதனைச்சூழவுள்ள 620குடும்பங்கள் ஆகியோர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சிறுநீரக தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி , இலங்கை கடற்படை, சிங்கப்பூர் நட்புறவு மன்றம் ஆகியன நிதியனுசரனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இது வரை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் 194 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 92,291 குடும்பங்களுக்கு மற்றும் 72,550ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.